ஞாயிறு, 11 மார்ச், 2018

தமிழ் அறிவியல் மொழி

🌿🌿🌿
பெரியார் சொன்னதைப் போல தமிழ் காட்டுமிராண்டி மொழியல்ல.
சங்கர மடச் சாமியார் சொன்னதைப் போல தமிழ் நீச பாசை அல்ல.

தமிழ் அறிவியல் மொழி.
============
சித்தர்கள் என்போர் பண்டைய தமிழகத்தின் அறிவியலாளர்கள் ஆவர். அவர்கள் ஆன்மீகவாதிகளோ சாமியார்களோ அல்லர். அவர்கள் விஞ்ஞானிகள் (Scientists). அவர்கள் வானியல், மருத்துவம், வேதியியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்தனர்.

96 உடல்தத்துவங்களாகப் பிரித்து மனித உடற்கூறியலை ( Human Anatomy) ஆராய்ந்தனர்.

நோயியல் (Pathology) துறையில் மிக ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 4448 என்று வரையறுத்தனர். இது நோயியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சி அறிவைக் காட்டுகிறது. மூச்சுறுப்புகளில் ஏற்படும் நோய்களை கப நோய்கள் எனவும், செரிமான உறுப்புகளில் ஏற்படும் நோய்களைப் பித்த நோய்கள் எனவும், மற்றவற்றை வாத நோய்கள் எனவும் வகைப்படுத்தினர்.

மருந்தியல் (Pharmacology) பற்றி விரிவான ஆய்வு செய்தனர். அதன் பயனாக கண்டுபிடித்த மருந்துகளை 32 வகை உள்மருந்துகள், 32 வகை வெளிமருந்துகள் என வகைப்படுத்தினர். மருந்தியல் துறையில் ஏராளமான நூல்களைப் படைத்துள்ளனர்.

நரம்பியலை ஆராய்ந்து வர்ம மருத்துவத்தைக் கண்டுபிடித்தனர். இந்த வர்ம மருத்துவம் சித்தர்கள் கண்டுபிடித்த நரம்பியல் மருத்துவம் (Neurological medicine) ஆகும்.

வேதியியல் துறையை வாதம் என்ற பெயரில் ஆராய்ந்தனர். போகர் வேதியியல் துறையில் ஆழமான விரிவான ஆய்வுகளைச் செய்தவர். செயற்கையாக வேதிப்பொருள்களாகிய தாதுக்களைத் தயாரிக்கும் முறைகளைக் கண்டுபிடித்தனர். அதற்கு வைப்புமுறை என்று பெயரிட்டனர். சித்தர்கள் எழுதிய வாதநூல்கள் அனைத்தும் வேதியியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சியை வெளிப்படுத்துபவை ஆகும்.

விண்பொறியியல் துறையில் போகர் ஆராய்ந்திருக்கிறார். அதன் பயனாக பஞ்சபூதத்தால் செய்த ஆகாயப்புரவி என்ற விமானத்தைக் கண்டுபிடித்து சீனாவுக்குப் பயணம் செய்திருக்கிறார். ஆகாயப்புரவி என்ற விமானம் பற்றிய குறிப்புகளை போகர் ஏழாயிரம் என்ற நூலில் காணமுடிகிறது.

உடல், மனம், அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் யோக ஆய்வுகளைச் செய்து யோக நூல்களையும் படைத்தனர்.

மெய்யியல் என்னும் தத்துவத்துறையிலும் ஆய்வுகளைச் செய்தனர். தமது தத்துவ ஆய்வுச் சிந்தனைகளை ஞானநூல்களாகப் படைத்தனர். மொத்தத்தில் சித்தர்கள் பலதுறை வல்லுநர்களாக விளங்கினர்.

சித்த மருந்தியலையும் , சித்த வேதியியலாகிய வாதத்தையும் நவீன வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி ஆராய்வதன் மூலம்  அறிவியல் உலகிற்குப் புதிய வெளிச்சத்தைத் தர முடியும். உலக அறிவியல் வரலாற்றில் சித்தர்களை அறிவியலாளர்களாகக் குறிப்பிடச்செய்ய வேண்டியது நமது கடமை.

இப்போதும் ஆங்கில மருத்துவத்திற்கு சித்த மருத்துவம் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது.
பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லாதபோதும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன என்பதை சித்த மருத்துவம் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கிறது.

சித்தர்கள் தமிழில் எழுதிய மருத்துவ அறிவியல் நூல்கள் இப்போதும் 500 க்கும் மேற்பட்டவை நமக்குக் கிடைத்துள்ளன.

தமிழ் பண்டைக் காலத்திலிருந்தே அறிவியல் மொழி.
தமிழ் நமது தாய்மொழி என்பதால் பெருமைப்படுவோம்.