சனி, 10 மார்ச், 2018

திராவிடர் என்ற சொல்லும் பொருண்மை மாற்றமும்

திராவிடர் என்ற சொல்லும் பொருண்மை மாற்றமும்:
=============
பண்டைக் காலத்தில் திராவிடர் என்ற சொல் விந்திய மலைக்குக் தெற்கே வாழ்ந்த பிராமணர்களை மட்டுமே குறித்தது. ஆந்திரம், கர்னாடகம், மஹாராஷ்ட்ரம் ஆகிய பகுதியை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் வாழ்ந்த பிராமணர்களை பஞ்ச திராவிடர் என்று அழைத்தனர். விந்திய மலைக்கு வடக்கே இருந்த வட இந்திய பிராமணர்களை பஞ்ச கௌடர் என்று அழைத்தனர்.
பஞ்ச திராவிடராகிய பிராமணர்கள் வாழும் நிலப்பரப்பை பஞ்ச திராவிடம் என்றும் அழைத்தனர்.
திருஞானசம்பந்தர் ஒரு பிராமணர். அதனாலேயே அவரை "திராவிட சிசு" என்று அழைத்தனர்.
தென்னிந்திய மொழிகளை ஆராய்ந்த மொழியறிஞர் எல்லீசு, கால்டுவெல் போன்றவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஒரு குடும்ப மொழிகள் என்பதைக் கண்டறிந்து அம் மொழிக்குடும்பத்துக்கு "திராவிட மொழிக் குடும்பம்" என்று பெயர் வைத்தனர்.
அதனால் தென்னிந்திய நிலப்பரப்பைக் குறிக்கப் பயன்படுத்திய திராவிடம் என்ற சொல் கால்டுவெல், எல்லீசு போன்றவர்களால் மொழிக்குடும்பத்தைக் குறிக்கும் சொல்லாக பொருண்மை மாற்றம் அடைகிறது.
அதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகப் பேசும் (பிராமணரல்லாத) மக்களைக் குறிக்கும் சொல்லாக திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

அதாவது பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்திய திராவிடர் என்ற சொல் பிராமணரல்லாத மக்களைக் குறிக்கும் சொல்லாக பொருண்மை மாற்றம் அடைகிறது.

இந்த திராவிடம், திராவிடர் என்ற கருத்தியலால் தமிழகத்தில் மட்டும் பார்ப்பனியத்தை எதிர்த்து திரவிடத்தேசியம் என்ற அரசியல் தத்துவம் வளர்ந்து 1920 முதல் தற்போதுவரை அரசாளுமை செலுத்தியுள்ளது.
இந்த திராவிடத் தேசிய அரசியல் தமிழகத்தில் மட்டும் இருப்பதாலும், திராவிடத் தேசிய அரசியலில் தமிழகத்தில் உள்ள கன்னடரும், தெலுங்கரும் மட்டும் தலைமைத்துவ ஆதிக்கம் செலுத்துவதாலும் இப்போது தமிழர்கள் தலைமைதாங்கும் தமிழ்த்தேசிய அரசியல் வளர்ந்து வருகிறது.

தமிழ்த்தேசிய அரசியலின் எழுச்சியால் இப்போது திராவிடர் என்ற சொல் தமிழகத்தில் வாழும் தெலுங்கரையும் கன்னடரையும் மட்டும் குறிக்கும் சொல்லாக பொருள் குறுக்கம் என்றவகையில் பொருண்மை மாற்றம் அடைந்துவருகிறது.
தமிழர் வேறு திராவிடர் வேறு என்று சொல்லும் வகையில் திராவிடர் என்ற சொல் பொருண்மை மாற்றம் அடைந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

மொழியில் தோன்றும் சொற்களும் அதன் பொருளும் காலத்திற்கு ஏற்ப மாறுவதைத்தான் பொருண்மை மாற்றம் என்கின்றனர் மொழியியலறிஞர்.

எள்+நெய்=எண்ணெய்.
முதலில் எள்ளின் நெய்யாக வழங்கி, பின் எண்ணெய் பொதுச்சொல்லாகி, எள்நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் உருவாகிவிட்டதல்லவா?

காஷ்மீரத்தின் வரலாற்றைச் சொல்லும் ராஜதரங்கினி என்ற நூலை கல்ஹனர் என்பவர் 12 ம் நூற்றாண்டில் எழுதினார். அதில் வட இந்தியாவில் வாழ்ந்த ஐந்து பிராமணர் குழுக்களை பஞ்ச கௌடர் என்றும், விந்திய மலைக்குத் தெற்கே தென்னிந்தியாவில் வாழ்ந்த ஐந்து பிராமணர் குழுக்களை பஞ்ச திராவிடர் என்றும் குறிப்பிடுகிறார்.

ஆரியர் என்பது அவர்களின் (பிராமணர்களின்) பொதுவான இனப்பெயர்.
பஞ்ச திராவிடர், பஞ்ச கௌடர் என்பது இந்திய பிராமணர்களுக்குள் உட்பிரிவு.

கர்நாடகாஸ்²ச தைலங்கா³: த்³ரவிடா³: மஹராஷ்ட்ரகா​: |
கு³ர்ஜராஸ்²சேதி பஞ்சைவ த்³ரவிடா³: விந்த்⁴யத³க்ஷிணே ||

ஸாரஸ்வதா​: காந்யகுப்³ஜா: கௌ³டா³: உத்கலமைதி²லா​: |
பஞ்சகௌ³டா³: இதி க்²யாதா விந்த்⁴ஸ்யோத்தரவாஸின: ||

குஜராத் பகுதி பிராமணர்களையும் பஞ்ச திராவிட பிராமணர்களில் அடக்குகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக