திங்கள், 16 ஏப்ரல், 2018

அகத்தியர் குணவாகடம் என்ற நூல்:

☘🌿☘🌿
*அகத்தியர் குணவாகடம் என்ற நூல் மனித உடற்கூறியலை நவீன உடற்கூறியல் ஆய்வுக்கு நிகராக விளக்கிச்சொல்லும் நூல். ஒவ்வொரு உறுப்பின் அமைப்பையும் செயல்படும் விதத்தையும் சொல்லும் பாங்கு அருமை.*

அதேபோல இந்த நூல் நவீன நோயியல் என்று சொல்லும் Modern Pathology க்கு நிகராக நோய்களை விளக்கிச் சொல்லும் பாங்கும் அருமை.

அதாவது அகத்தியர் குணவாகடம் என்ற நூல் உடற்கூறியல் (Anatomy), உடல் இயங்கியல் (Physiology), நோயியல் (Pathology) ஆகிவற்றை அறிவியல் அணுகுமுறையில் விளக்கிச் சொல்லும் அற்புதமான நூல்.

சித்தர்கள் காலத்தில் postmortem என்னும் உடற்கூறாய்வு செய்துபார்த்திருக்காமல் இந்த நூலைப் படைத்திருக்க முடியாது.

*அகத்தியர் குணவாகடம் என்னும் நூலில் மகப்பேறு மருத்துவம்:*

அகத்தியர் குணவாகடம் என்ற நூல் உடற்கூறியல், உடலியங்கியல், நோயியல் ஆகியவற்றை மிக விரிவாக விளக்குவதோடு மகப்பேறு மருத்துவம் பற்றியும் விரிவாக விளக்குகிறது.

1193 ம் பாடல் முதல் 1501 ம் பாடல் வரை மகப்பேறு மருத்துவம் பற்றி விளக்குகிறது.

1193 ம் பாடல் முதல் 1246 ம் பாடல் வரை பிள்ளைப்பேறு, கருப்பிண்டம், நஞ்சு, கருப்பச்சின்னங்கள் ஆகிய தலைப்புகளில் ஆணின் விந்துக்கிருமி பெண்ணின் நாதத்துடன் சேர்ந்து குழந்தை உருவாகிறது என்றும், குழந்தை ஒவ்வொரு மாதமும் எந்தெந்த வளர்ச்சிப் படிநிலைகளைத் தாயின் வயிற்றில் அடைகிறது என்றும் விளக்குகிறது.

1247 ம் பாடல் முதல் 1501 ம் பாடல் வரை பிரசவம் பார்க்கும் முறைகளை விரிவாக விளக்குகிறது.

பிரசவ விதிகள், கிரமப் பிரசவம், பிரசவ இலட்சணம்,  செவ்வாப்பு, கஷ்டப் பிரசவம், அகாலப் பிரசவம், கிரமாதீதப் பிரசவம், இடைக்குழி, பிரசவ வேலைகள், சிசு திரும்புதல், சிசுவைத் திருப்புகிற விவரம், காலைப் பிடித்து திருப்புதல், ஆயுத விவரம், குறடு, சேதிக்கும் வகை, கருப்பாசய சேதன முறை ஆகிய தலைப்புகளில் மிக விரிவாக பிரசவம் பார்க்கும் முறைகளை விளக்குகிறது.

குழந்தை திரும்பி கொண்டோ, குழந்தையின் தலை பெரிதாக இருக்கும் போதோ குழந்தை பிறக்க முடியாமல் தாய் துன்பப்படும்போது தாயையும் குழந்தையையும் உயிரோடு காப்பாற்றுவதற்காக உதகருசி, குறடு, கத்தரிக்கோல், அங்குசம், மொட்டைக்குறடு ஆகிய ஆயுதங்களையும், மயக்க மருந்தாக சாராயத்தையும் பயன்படுத்துவதையும் விளக்குகிறது.
அவ்வாயுதங்களை கொதிக்கும் நீரில் சுத்தம் செய்து விளக்கெண்ணெய் பூசிக்கொண்டு பயன்படுத்த வேண்டும் என்கிறது.

கஷ்டப் பிரசவத்தின் போது குழந்தை பிறக்க முடியாமல் வயிற்றிலேயே இறந்துவிட்டால் அந்த குழந்தையை வெளியே எடுக்கும் முறைகளை விளக்கிச் சொல்லுவது சித்தர்களின் மகப்பேறு மருத்துவத்தின் அறுவைச் சிகிச்சை முறைகளைத் தெளிவுபடுத்துகிறது.
தலை பெரிதாக இருந்து குழந்தை வெளிவராவிட்டால் அதன் தலையைத் துளைத்து மூளையை வெளியேற்றித் தலையைச் சிறிதாக்கி இறந்த குழந்தையை வெளியேற்றும் பாங்கை அழகாகச் சொல்கிறது.
இவற்றை எல்லாம் பார்க்கும் போது சித்தர்கள் காலத்தில் மகப்பேறு மருத்துவம் மிகச் சிறப்பான வளர்ச்சி நிலையை எட்டி இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

சித்தர்கள் கண்டுபிடித்த மருத்துவம் தற்கால அலோபதி மருத்துவத்தை விட மிக உயரிய மருத்துவம் என்பதை எண்ணி தமிழரெல்லாம் பெருமையடைய வேண்டும்.

நவீன மருத்துவ அறிவியல் அடித்தளம் நமது சித்த மருத்துவமே ஆகும்.
ஐரோப்பியர்கள் அறிவற்ற காட்டுமிராண்டிகளாக இருந்த காலகட்டத்தில் மருத்துவ அறிவியல் ஆய்வுகளில் சிறந்து விளங்கியவர்கள் நமது சித்தர்கள்.

ஆங்கில மருத்துவம் அறிவியல் மருத்துவமாக வளர்ந்தது இருபதாம் நூற்றாண்டில்தான்.

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் பெருமைகளை எண்ணி வியக்க வேண்டாமா?