திங்கள், 15 ஜனவரி, 2018

தமிழர்களின் இறைவழிபாட்டு வரலாறு

தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் முதன்மையானது குலதெய்வ வழிபாடு. இது நடுகல் வழிபாட்டு முறையிலிருந்து வளர்ந்தது.
சிவன், முருகன் ஆகிய கடவுளை வழிபடும் சைவ மத வழிபாடு தமிழர்களிள் பொதுத் தெய்வ வழிபாடு. அதற்கடுத்து திருமால் என்னும் பெருமாளை வழிபடும் வைணவமும் தமிழர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்று.

சங்க காலத்தில் மலைவாழ் மக்கள் முருகனை வழிபட்டனர். மலைப்பகுதியை அடுத்த முல்லைநில காட்டுப்பகுதி மக்கள் திருமாலை வழிபட்டனர். பாலை நில மக்கள் காளியை வழிபட்டனர். ஆற்றுப்பாசன பகுதி மக்கள் இந்திரனை வழிபட்டனர். கடற்கரை பகுதி மக்கள் வருணனை வழிபட்டனர்.

சங்க காலத்திற்கு பிறகு புத்த மதமும், சமண மதமும் தமிழகத்திற்கு வந்தன. 300 ஆண்டுகளுக்கு மேல் புத்தமும் சமணமும் தமிழகத்தில் செல்வாக்குடன் இருந்தன. தமிழர்கள் பலர் புத்த, சமண மதங்களுக்கு மாறினர்.

அதன்பிறகு ஆழ்வார்களும் நாயன்மார்களும் தீவிர பிரச்சாரம் செய்து புத்த மதத்தையும் சமண மதத்தையும் ஒழித்தனர். சைவமும் வைணவமும் வளர்ந்தன. புத்த, சமண கோயில்கள் பல சைவ, வைணவ கோயில்களாக மாற்றப்பட்டன.

சேர நாட்டு வணிகர்கள் அரேபியாவுக்கு வியாபாரம் செய்ய சென்றதாலும் அரேபியாவிலிருந்தும் வியாபாரிகள் சேர நாடாகிய கேரளாவுக்கு வியாபாரம் செய்ய வந்ததாலும், அந்த வணிகர்களால் இஸ்லாம் மதம் கடல் வழியாக சேரநாடாகிய கேரளாவுக்கு வந்தது.
தமிழர்கள் சிலர் இஸ்லாம் மதத்துக்கும் மாறினர்.

ஐரோப்பியர் வருகையால் கிருத்துவம் தமிழகத்தில் சில இடங்களில் பரவியது. தமிழர்களில் சிலர் கிருத்துவ மதத்துக்கும் மாறினர்.

எத்தனை மதங்கள் வெளியிலிருந்து வந்தாலும் பாரம்பரியமான குலதெய்வ வழிபாடும், சைவ, வைணவ  வழிபாட்டு முறைகளும் அழியாமல் தமிழர் மனங்களில் நிலைபெற்றுள்ளன.
இதுதான் தமிழர்களின் இறைவழிபாட்டுவரலாறு.