திங்கள், 25 டிசம்பர், 2017

பழங்காலத்தில் கோள்களை எப்படி கண்டுபிடித்தனர்?


வானத்தில் விண்மீன்கள் ஒன்றுக்கொன்று இடம்பெயராமல் நிலையாகக் காட்சியளிப்பவை. பழங்காலத்தவர்கள் பூமியிலிருந்து பார்க்கும்போது விண்மீன்களைப் போன்றே தோற்றமளிக்கும் சில விண்பொருள்கள் (நகரும் விண்மீன்கள்) ஒரு விண்மீன் கூட்டத்திலிருந்து மற்ற விண்மீன் கூட்டங்களுக்கு இடம்பெயர்வதைக் கண்டனர். அவற்றைக் கோள்கள்(கிரகங்கள்) எனப் பெயரிட்டழைத்தனர். இந்தக் கோள்கள் விண்மீன்களைக் காட்டிலும் சற்று பெரியவையாகக் காட்சியளிப்பதால் அவற்றை ஆண்டுக்கணக்கில் உற்றுநோக்க அவர்களுக்கு எளிதாக இருந்தன. மற்ற விண்மீன்களைப் போன்றே சூரியனும் ஒரு விண்மீன்தான். எனினும் புவி சூரியனைச் சுற்றுவதால் புவியிலிருந்து பார்க்கும் போது சூரியன் ஒரு விண்மீன் கூட்டத்திலிருந்து மற்ற விண்மீன் கூட்டங்களுக்கு இடம்பெயர்வது போன்று தோன்றுவதால் சூரியனையும் ஒரு கோள் என்றனர். சந்திரன் புவியின் துணைக்கோள் என்றாலும் அதுவும் புவியிலிருந்து பார்க்கும்போது இடம்பெயரும் விண்போருள் என்பதால் அதனையும் கோள் என்றனர். அதாவது புவியிலிருந்து பார்க்கும்போது கண்ணுக்குத் தெரிந்த இடம்பெயரும் விண்பொருள்களைக் கோள்கள் (கிரகங்கள்) என்றனர்.

நாம் பார்க்கும் நட்சத்திரங்களில் மிகப்பெரிதாக தெரியக்கூடியது வியாழன் என்னும் குரு கிரகம்.

விடியற்காலை நேரத்தில் கிழக்கு அடிவானத்திலும் சில மாதங்களில் மாலை நேரத்தில் மேற்கு அடிவானத்திலும் தெரியும் பெரிய நட்சத்திரம் வெள்ளி என்னும் சுக்கிரன் கிரகம்.

அதற்கு அருகில் அதைவிட சற்று சிறிதாக தெரியக்கூடியது புதன் கிரகம்.

சிவப்பு நிறத்தில் தெரியக்கூடியது செவ்வாய் கிரகம். இதுவும் சற்று பெரிதாகவே தெரியும்.

மஞ்சள் நிறத்தில் தெரியக்கூடிய நட்சத்திரம் சனி கிரகம்.

ராகு, கேது இரண்டும் உண்மையான கோள்கள் இல்லை. அவற்றை கண்ணால் பார்க்க முடியாது. சூரியனின் தோற்றப்பாதையும், சந்திரனின் வட்டப்பாதையும் சந்திக்கும் எதிரெதிரான இரண்டு புள்ளிகளே ராகு, கேது.

ராகு, கேது புள்ளிகளை கணக்கீடு செய்துதான் சூரியகிரகணம், சந்திரகிரகணம் எப்போது வரும் என்பதைச் சொல்கின்றனர்

காலண்டரில் ராசிக்கட்டத்தை பார்த்திருக்கீங்களா?அந்த ராசிக்கட்டத்தை கொண்டு வானத்தில் இப்போது கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதை பார்க்க முடியும். அந்த ராசிகட்டம் என்பது உண்மையிலேயே விண்வெளியை குறிக்கிறது.

பூமியைச் சுற்றியுள்ள விண்வெளியை மேற்கிலிருந்து கிழக்காக 12 பகுதியாக பிரித்துள்ளனர்
அதனை 12 இராசிகள் என்பர். இராசிகட்டத்தில் 12 கட்டம் இருக்கும்.

அதேபோல பூமியை சுற்றியுள்ள விண்வெளியை மேற்கிலிருந்து கிழக்காக 27 பகுதியாக  பிரித்துள்ளனர். அவற்றை 27 நட்சத்திரங்கள் என்பர்.
நிலாவானது 27 நாள்களில் பூமியை சுற்றிவிடுகிறது்.
நிலா ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் கடக்கிறதோ அவ்வளவு தூரத்தை ஒரு நட்சத்திரம் என்று குறிப்பிடுகின்றனர். 27 நாள் கடக்கும் தூரத்தை 27 நட்சத்திரமாக குறிப்பிடுகின்றனர்.

இதுதான் சோதிடத்திற்கு அடிப்படை.

நான் சொன்னபடி கிரகங்களை இரவு நேரத்தில் பார்த்து மகிழுங்கள்.