வெள்ளி, 25 ஜனவரி, 2013

இணையத்தில் ஒரு பல்கலைக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் (முந்தைய பெயர் :தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீடிக்கவும் 17 பெப்ரவரி 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு,ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.

கல்வித்திட்டம்

இக்கழகத்தின் பணித்திட்டம் இணையவழிக் கல்வித்திட்டங்கள், மின் நூலகம், கணித்தமிழ் வளர்ச்சி என பலவற்றைக் கொண்டுள்ளது. கல்வித்திட்டத்தின் கீழ் சான்றிதழ்க் கல்வி மூன்று நிலைகளில் (அடிப்படை,இடைநிலை மற்றும் உயர்நிலை) வழங்கப்படுகிறது. தவிர, தமிழ் மொழி இளங்கலைப் பட்டப்படிப்பும் அளிக்கப்படுகிறது. தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியே தமிழ் முதுகலைப் பட்டமும் வழங்கப்படுகிறது.

மின் நூலகம்

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் மின் நூலகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து, பயில்வோர் மற்றும் உலகு தழுவி வாழும் தமிழர்கள் அனைவரது பயன்பாட்டிற்காகவும் உருவமைக்கப்பட்டுள்ளது. இம்மின் நூலகத்தில் நூல்கள், அகராதிகள், பிற பார்வைக் கூறுகள் என்னும் 3 பிரிவுகள் உள்ளன. சங்க கால நூல்களிலிருந்து சமகால இலக்கியம் வரை பல இலக்கிய படைப்புகளின் மின்னூல்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. வகை பிரித்தல், விளக்கவுரைகளுடன் கூடிய தொன்மை இலக்கியங்கள் மற்றும் உரோமன் எழுத்துருவில் தொல்காப்பியம்,பத்துப்பாட்டு , எட்டுத்தொகை என்பன இந்நூலகத்தின் சிறப்புகளாக விளங்குகிறது. விரிவான பொருள்சார் சுட்டிகளாக்குதல் (subject-indexing) மற்றும் தேடல் வசதியும் பெரும் வசதியாக உள்ளது.
பல்கலைக்கழகத்திற்குச் செல்ல கீழே சொடுக்குக.