செவ்வாய், 16 ஜனவரி, 2018

அலோபதி மருத்துவத்தின் தோற்றம்:


மனிதனது அச்ச உணர்வின் காரணமாக தோன்றிய கருத்துக்களே முதலில் மதமாகவும், பின்னர் மருத்துவமாகவும் உருவெடுத்தது. இவ்வாறாக, வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கால கட்டம் வரை மதமும், மருத்துவமும் பின்னிப்பிணைந்திருந்தது மறுக்க இயலாத உண்மையாகும். ஆனால், இது ஒரு காலகட்டம் வரை மட்டும்தான். அறிவியல் வளரவளர மதத்திற்கும், மருத்துவத்திற்கும் இடையே இருந்த தொடர்பு மெதுவாக அறுபட ஆரம்பித்தது. எனவே, இன்று வரை அறிவியல் அடிப்படையில் இயங்கி வருவது நவீன மருத்துவம் அலோபதி மருத்துவம் என்ற பெயரில் எல்லாம் வழங்கப்படும்
ஆங்கில மருத்துவ முறையே ஆகும்.

_ஆரம்ப காலக் குறிப்புகள்:_

மருத்துவம் (Medicine) என்ற ஆங்கில சொல் இலத்தீன் மொழியில் உள்ள ஆர்ஸ் மெடிசினா (Ars Medicina) என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும் இதன் பொருள் 'குணப்படுத்தும் கலை' என்பதாகும். மருத்துவத்தைப் பற்றிய தொடக்க காலக் குறிப்புகள், பின்வரும் ஐந்து வகை ஆதாரங்களில் இருந்து நமக்கு கிடைக்கின்றன:

1. இந்தியாவின் சித்த மருத்துவம் , ஆயுர்வேதம் ,
அதர்வண வேத குறிப்புகள்.
2. எகிப்தின் பாப்பிரஸ் - இதில் உள்ள மருத்துவக் குறிப்புகள்.
3. பழமை வாய்ந்த சீன மருத்துவக் கலை.
4. செவ்விந்திய-மாயா மருத்துவக் குறிப்புகள்.
5. கிரேக்க மருத்துவக் குறிப்புகள்.

_கிரேக்க மருத்துவம்:_

கிரேக்க மருத்துவ அறிஞரான
ஹிப்போ கிரடீஸ் அவர்களுடைய மருத்துவக் குறிப்புகளே இவற்றுள் சிறந்ததாகவும் ஒரளவிற்கு அறிவியல் தன்மை வாய்ந்ததாகவும் காணக்கிடைக்கிறது. எனவே இவரே "மருத்துவத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். இவர் மருத்துவத்தை ஓரளவிற்கு மதத்திலிருந்து பிரித்து அதை ஒரு தனிக்கலையாக வளர்த்தார். அதற்கு ஒரு தனியான நடைமுறை அறிவுடன் கூடிய நடைமுறையை ஏற்படுத்தியவர் இவரே. நோயாளிகளை பரிசோதிப்பதன் மூலமாகவும் அவர்களுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பதன் மூலமாகவும் நோய்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம் என்பதை முதன் முதலில் கூறியவர்.

நோய்க்கான காரணத்தை அவனுடைய உடலில் இருந்து அல்லது அவனுடைய சூழ்நிலையில் இருந்து அறிந்து கொள்ள இயலும் என்பதை முதன் முதலில் தெளிவுப்படுத்தியவரும் இவரே.
மேலும் மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் நோயாளிகளுக்கு எவ்விதம் சிகிச்சை அளித்தல் வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் தெளிவாகவும் ஒரு திட்டவட்டமான வரையறுப்புடனும் எழுதிய முதல் மருத்துவரும் இவரே. இவருடைய புகழ் வாய்ந்த ”ஹிப்போகிரடீஸ் உறுதிமொழி" மருத்துவ உலகின் தொன்மையான, செம்மையான, ஆவணங்களுள் ஒன்று. ஒவ்வொரு மருத்துவரும் தம்முடைய மருத்துவ படிப்பை முடித்தவுடன் இந்த உறுதிமொழியின் பெயரிலேயே தன்னுடைய தொழிலைத் தொடங்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இன்றும் இருந்து வருகிறது. இவருக்குப் பிறகு கேலன் என்ற கிரேக்க அறிஞர் மருத்துவத் துறைக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார். மனிதனுடைய உள் உடம்பின் அமைப்பை அறிவதற்கு இறந்து போனவர்களின் உடலை அறுத்து அதில் இருந்து கற்றுக் கொள்ளும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் இவரே. இதை அவர் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையேயும் தொடர்ந்து செய்துள்ளார். இன்றைக்கு உள்ள மனித உடலமைப்பு பற்றிய புரிதலுக்கு வித்திட்டு வைத்தவர் கேலன் அவர்களே.

_இஸ்லாமிய மருத்துவம்:_

இதன் பின்னர் மருத்துவத்தின் வளர்ச்சியானது அரேபிய நாடுகளுக்கு மாறிவிட்டது.
இஸ்லாம் மதம் தோன்றியவுடன் அரேபிய நாடுகளில் ஒரு வகையான மறுமலர்ச்சி தோன்றியது. இஸ்லாமிய பேரறிஞர்கள் மருத்துவத்தில் புதிய கண்டுப்பிடிப்புகளையும் சாதனைகளையும் நிகழ்த்தினர். இதற்கு அடிப்படையான காரணம் அரேபியர்கள் சிறந்த கடல் வணிகர்களாகவும் பல நாடுகளுக்கு சென்று வரும் சுற்றுலாப்பயணிகளாகவும் விளங்கியதுதான். அவர்கள் மேலை நாடுகளுக்கு பயணம் செய்த போது அங்கிருந்த பொருள்களுடன் மட்டும் வணிகம் செய்யவில்லை .அங்கிருந்து ஹிப்போகிரடீஸ் மற்றும் கேலன் அவர்களின் மருத்துவ நூல்களையும் அரேபிய தேசத்திற்கு கொண்டு வந்தனர் அவை அரேபிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டபோது ஒரு சிந்தனை புரட்சியை ஏற்படுத்தியது. அதுபோன்றே அவர்கள் கீழை நாடுகளுடன் வணிகத் தொடர்புக்காக சென்றபோது சித்த, ஆயுர்வேத, சீன மருத்துவ முறை குறித்த நூல்களையும் கொணர்ந்து அரேபியாவை வளப்படுத்தினர். இவ்வாறு பொருள் வணிகம் என்பது கருத்து சேகரிப்புக்கும் உதவியது இது அரேபியாவின் மருத்துவத்துறையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது. அவிசென்னா, அபுல்காசி, அவென்சா, நாபிஸ், அவோரஸ் போன்ற அரேபிய மருத்துவ அறிஞர்கள் தோன்றி புதிய கருத்துகளை முன் மொழிந்தனர். ரேஸஸ் என்ற மருத்துவ அறிஞர் குழந்தைகள் மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். இவர் கிரேக்க மருத்துவத்தின் அடிப்படையாக விளங்கிய "திரவ கோட்பாட்டினை" மறுத்து நோய்களைக் கண்டறிவதை மேலும் துல்லியமாக மாற்றி அமைத்தார்.

_ஐரோப்பிய மருத்துவம்:_

ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலம் (14, 15 நூற்றாண்டு) மதம், மருத்துவம் உள்ளிட்ட பலதுறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது ஐரோப்பாவில் புதிய புதிய சிந்தனையாளர்களும், அறிவியல் ஆய்வாளர்களும், மருத்துவ அறிஞர்களும் தோன்றினர். மருத்துவத்தைப் பற்றிய கருத்துகளில் ஒரு பெரிய மாற்றம் எற்பட்டது அந்த கட்டத்தில் கொடுமையான நோய்களான பிளேக் போன்றவை ஐரோப்பா கண்டத்தை ஆட்டிப்படைத்து. 'கருப்பு மரணம்' என்று அழைக்கப்படும் பிளேக் நோயினால் இரண்டு நூற்றாண்டுகள் ஐரோப்பிய நாடுகள் சொல்லொணா துயர் அனுபவித்து வந்தன. ஆனால் அரேபிய நாடுகள் இந்த நோய்களில் இருந்து விடுபட்டே காணப்பட்டது இந்த உண்மை மேலை நாட்டு அறிஞர்களிடத்தில் புது வகை எண்ணங்களைத் தோற்றுவித்தன. தாங்கள் இதுவரை கொண்டிருந்த கருத்துகளைக் குறித்து மறு ஆய்வு செய்யத் தொடங்கினர். இதனால் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் தொடங்கியது.
கிரேக்க ரோமானிய கருத்துகளின் அடிப்படையில் அதுவரை ஆட்சிபுரிந்து வந்து மருத்துவக் கருத்துகள் புறம் தள்ளப்பட்டன. இபேன் - அல் - நபிஷ், வேஸேலியஷ் போன்ற அரேபிய, இஸ்லாமிய, மருத்துவ அறிஞர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது பழமைவாதத்தில் இருந்த மருத்துவியல் அறிவியலை நோக்கி எடுத்து வைத்த இரண்டாவது அடியாகும். மருத்துவத் துறையில் பல சோதனைகள் செய்யப்பட்டன. கிரேக்க அறிஞர்களின் ' திரவக் கோட்பாடு' மறுக்கப்பட்டது.
வில்லியம் ஹார்வி என்பவர்
இரத்தம் ஒரே இடத்தில் தங்கி இருக்கிறது என்ற கருத்தினை மறுத்து அது உடல் முழுதும் சுற்றி வருகிறது என்ற கருத்தினை முன் வைத்தார்.. முன் வைத்தது மட்டுமல்லாமல் அதை அறிவியல் பூர்வமாக நிருபிக்கவும் செய்தார் விலங்குகளின்மீது அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலமாக இரத்தம் உடலின் பல பாகங்களிலும் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை நிருபித்தார்.
1880இல் ராபர்ட் கோக் குறிப்பிட்ட சில வகை நோய்கள் பாக்டீரியா என்ற நுண்ணுயிர்களால் ஏற்படுகின்றன என்பதை அறிவியல் முறையில் நிருபித்தார். அவை ”காக்ஸ் கோட்பாடுகள்” என்று அழைக்கப்பட்டு இன்றும் மருத்துவத் துறையில் போற்றப்பட்டு வருகின்றன.

18ம் நூற்றாண்டிற்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது மேலை நாடுகளை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே நடந்து வருகிறது. ஜெர்மன்,
பிரான்சு , இங்கிலாந்து,
அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மருத்துவத் துறையைச் செழுமைப்படுத்தும் விதமாக பல மருத்துவ கண்டுபிடிப்புகளையும் கோட்பாடுகளையும் நிறுவினர். (எ. கா) ஜோசப் லிஸ்டர் என்பவர் நமது கைகளில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் வழியாக நோயாளிகளுக்கு தொற்று ஏற்படக் கூடும் என்று முதன் முதலில் கூறினார். எனவே மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்த பிறகு தூய நீரினால் அல்லது சவர்க்காரத்தினால் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் மற்ற நோயாளிகளை பரிசோதிக்க வேண்டும் என்ற முறையை ஏற்படுத்தினார். இது குறிப்பாக பிரசவம் பார்க்கும் மருத்துவ அறிஞர்களுக்கு பொருந்தும் என்பது அவருடைய வாதம்.

திங்கள், 15 ஜனவரி, 2018

தமிழர்களின் இறைவழிபாட்டு வரலாறு

தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் முதன்மையானது குலதெய்வ வழிபாடு. இது நடுகல் வழிபாட்டு முறையிலிருந்து வளர்ந்தது.
சிவன், முருகன் ஆகிய கடவுளை வழிபடும் சைவ மத வழிபாடு தமிழர்களிள் பொதுத் தெய்வ வழிபாடு. அதற்கடுத்து திருமால் என்னும் பெருமாளை வழிபடும் வைணவமும் தமிழர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்று.

சங்க காலத்தில் மலைவாழ் மக்கள் முருகனை வழிபட்டனர். மலைப்பகுதியை அடுத்த முல்லைநில காட்டுப்பகுதி மக்கள் திருமாலை வழிபட்டனர். பாலை நில மக்கள் காளியை வழிபட்டனர். ஆற்றுப்பாசன பகுதி மக்கள் இந்திரனை வழிபட்டனர். கடற்கரை பகுதி மக்கள் வருணனை வழிபட்டனர்.

சங்க காலத்திற்கு பிறகு புத்த மதமும், சமண மதமும் தமிழகத்திற்கு வந்தன. 300 ஆண்டுகளுக்கு மேல் புத்தமும் சமணமும் தமிழகத்தில் செல்வாக்குடன் இருந்தன. தமிழர்கள் பலர் புத்த, சமண மதங்களுக்கு மாறினர்.

அதன்பிறகு ஆழ்வார்களும் நாயன்மார்களும் தீவிர பிரச்சாரம் செய்து புத்த மதத்தையும் சமண மதத்தையும் ஒழித்தனர். சைவமும் வைணவமும் வளர்ந்தன. புத்த, சமண கோயில்கள் பல சைவ, வைணவ கோயில்களாக மாற்றப்பட்டன.

சேர நாட்டு வணிகர்கள் அரேபியாவுக்கு வியாபாரம் செய்ய சென்றதாலும் அரேபியாவிலிருந்தும் வியாபாரிகள் சேர நாடாகிய கேரளாவுக்கு வியாபாரம் செய்ய வந்ததாலும், அந்த வணிகர்களால் இஸ்லாம் மதம் கடல் வழியாக சேரநாடாகிய கேரளாவுக்கு வந்தது.
தமிழர்கள் சிலர் இஸ்லாம் மதத்துக்கும் மாறினர்.

ஐரோப்பியர் வருகையால் கிருத்துவம் தமிழகத்தில் சில இடங்களில் பரவியது. தமிழர்களில் சிலர் கிருத்துவ மதத்துக்கும் மாறினர்.

எத்தனை மதங்கள் வெளியிலிருந்து வந்தாலும் பாரம்பரியமான குலதெய்வ வழிபாடும், சைவ, வைணவ  வழிபாட்டு முறைகளும் அழியாமல் தமிழர் மனங்களில் நிலைபெற்றுள்ளன.
இதுதான் தமிழர்களின் இறைவழிபாட்டுவரலாறு.

திங்கள், 25 டிசம்பர், 2017

பழங்காலத்தில் கோள்களை எப்படி கண்டுபிடித்தனர்?


வானத்தில் விண்மீன்கள் ஒன்றுக்கொன்று இடம்பெயராமல் நிலையாகக் காட்சியளிப்பவை. பழங்காலத்தவர்கள் பூமியிலிருந்து பார்க்கும்போது விண்மீன்களைப் போன்றே தோற்றமளிக்கும் சில விண்பொருள்கள் (நகரும் விண்மீன்கள்) ஒரு விண்மீன் கூட்டத்திலிருந்து மற்ற விண்மீன் கூட்டங்களுக்கு இடம்பெயர்வதைக் கண்டனர். அவற்றைக் கோள்கள்(கிரகங்கள்) எனப் பெயரிட்டழைத்தனர். இந்தக் கோள்கள் விண்மீன்களைக் காட்டிலும் சற்று பெரியவையாகக் காட்சியளிப்பதால் அவற்றை ஆண்டுக்கணக்கில் உற்றுநோக்க அவர்களுக்கு எளிதாக இருந்தன. மற்ற விண்மீன்களைப் போன்றே சூரியனும் ஒரு விண்மீன்தான். எனினும் புவி சூரியனைச் சுற்றுவதால் புவியிலிருந்து பார்க்கும் போது சூரியன் ஒரு விண்மீன் கூட்டத்திலிருந்து மற்ற விண்மீன் கூட்டங்களுக்கு இடம்பெயர்வது போன்று தோன்றுவதால் சூரியனையும் ஒரு கோள் என்றனர். சந்திரன் புவியின் துணைக்கோள் என்றாலும் அதுவும் புவியிலிருந்து பார்க்கும்போது இடம்பெயரும் விண்போருள் என்பதால் அதனையும் கோள் என்றனர். அதாவது புவியிலிருந்து பார்க்கும்போது கண்ணுக்குத் தெரிந்த இடம்பெயரும் விண்பொருள்களைக் கோள்கள் (கிரகங்கள்) என்றனர்.

நாம் பார்க்கும் நட்சத்திரங்களில் மிகப்பெரிதாக தெரியக்கூடியது வியாழன் என்னும் குரு கிரகம்.

விடியற்காலை நேரத்தில் கிழக்கு அடிவானத்திலும் சில மாதங்களில் மாலை நேரத்தில் மேற்கு அடிவானத்திலும் தெரியும் பெரிய நட்சத்திரம் வெள்ளி என்னும் சுக்கிரன் கிரகம்.

அதற்கு அருகில் அதைவிட சற்று சிறிதாக தெரியக்கூடியது புதன் கிரகம்.

சிவப்பு நிறத்தில் தெரியக்கூடியது செவ்வாய் கிரகம். இதுவும் சற்று பெரிதாகவே தெரியும்.

மஞ்சள் நிறத்தில் தெரியக்கூடிய நட்சத்திரம் சனி கிரகம்.

ராகு, கேது இரண்டும் உண்மையான கோள்கள் இல்லை. அவற்றை கண்ணால் பார்க்க முடியாது. சூரியனின் தோற்றப்பாதையும், சந்திரனின் வட்டப்பாதையும் சந்திக்கும் எதிரெதிரான இரண்டு புள்ளிகளே ராகு, கேது.

ராகு, கேது புள்ளிகளை கணக்கீடு செய்துதான் சூரியகிரகணம், சந்திரகிரகணம் எப்போது வரும் என்பதைச் சொல்கின்றனர்

காலண்டரில் ராசிக்கட்டத்தை பார்த்திருக்கீங்களா?அந்த ராசிக்கட்டத்தை கொண்டு வானத்தில் இப்போது கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதை பார்க்க முடியும். அந்த ராசிகட்டம் என்பது உண்மையிலேயே விண்வெளியை குறிக்கிறது.

பூமியைச் சுற்றியுள்ள விண்வெளியை மேற்கிலிருந்து கிழக்காக 12 பகுதியாக பிரித்துள்ளனர்
அதனை 12 இராசிகள் என்பர். இராசிகட்டத்தில் 12 கட்டம் இருக்கும்.

அதேபோல பூமியை சுற்றியுள்ள விண்வெளியை மேற்கிலிருந்து கிழக்காக 27 பகுதியாக  பிரித்துள்ளனர். அவற்றை 27 நட்சத்திரங்கள் என்பர்.
நிலாவானது 27 நாள்களில் பூமியை சுற்றிவிடுகிறது்.
நிலா ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் கடக்கிறதோ அவ்வளவு தூரத்தை ஒரு நட்சத்திரம் என்று குறிப்பிடுகின்றனர். 27 நாள் கடக்கும் தூரத்தை 27 நட்சத்திரமாக குறிப்பிடுகின்றனர்.

இதுதான் சோதிடத்திற்கு அடிப்படை.

நான் சொன்னபடி கிரகங்களை இரவு நேரத்தில் பார்த்து மகிழுங்கள்.

புதன், 13 டிசம்பர், 2017

சித்தர்கள் என்போர் யார்?

சித்தர்கள் என்போர் பண்டைய தமிழகத்தின் அறிவியலாளர்கள் ஆவர். அவர்கள் ஆன்மீகவாதிகளோ சாமியார்களோ அல்லர். அவர்கள் விஞ்ஞானிகள் (Scientists). அவர்கள் வானியல், மருத்துவம், வேதியியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்தனர்.

96 உடல்தத்துவங்களாகப் பிரித்து மனித உடற்கூறியலை ( Human Anatomy) ஆராய்ந்தனர்.

நோயியல் (Pathology) துறையில் மிக ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 4448 என்று வரையறுத்தனர். இது நோயியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சி அறிவைக் காட்டுகிறது. மூச்சுறுப்புகளில் ஏற்படும் நோய்களை கப நோய்கள் எனவும், செரிமான உறுப்புகளில் ஏற்படும் நோய்களைப் பித்த நோய்கள் எனவும், மற்றவற்றை வாத நோய்கள் எனவும் வகைப்படுத்தினர்.

மருந்தியல் (Pharmacology) பற்றி விரிவான ஆய்வு செய்தனர். அதன் பயனாக கண்டுபிடித்த மருந்துகளை 32 வகை உள்மருந்துகள், 32 வகை வெளிமருந்துகள் என வகைப்படுத்தினர். மருந்தியல் துறையில் ஏராளமான நூல்களைப் படைத்துள்ளனர்.

நரம்பியலை ஆராய்ந்து வர்ம மருத்துவத்தைக் கண்டுபிடித்தனர். இந்த வர்ம மருத்துவம் சித்தர்கள் கண்டுபிடித்த நரம்பியல் மருத்துவம் (Neurological medicine) ஆகும்.

வேதியியல் துறையை வாதம் என்ற பெயரில் ஆராய்ந்தனர். போகர் வேதியியல் துறையில் ஆழமான விரிவான ஆய்வுகளைச் செய்தவர். செயற்கையாக வேதிப்பொருள்களாகிய தாதுக்களைத் தயாரிக்கும் முறைகளைக் கண்டுபிடித்தனர். அதற்கு வைப்புமுறை என்று பெயரிட்டனர். சித்தர்கள் எழுதிய வாதநூல்கள் அனைத்தும் வேதியியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சியை வெளிப்படுத்துபவை ஆகும்.

விண்பொறியியல் துறையில் போகர் ஆராய்ந்திருக்கிறார். அதன் பயனாக பஞ்சபூதத்தால் செய்த ஆகாயப்புரவி என்ற விமானத்தைக் கண்டுபிடித்து சீனாவுக்குப் பயணம் செய்திருக்கிறார். ஆகாயப்புரவி என்ற விமானம் பற்றிய குறிப்புகளை போகர் ஏழாயிரம் என்ற நூலில் காணமுடிகிறது.

உடல், மனம், அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் யோக ஆய்வுகளைச் செய்து யோக நூல்களையும் படைத்தனர்.

மெய்யியல் என்னும் தத்துவத்துறையிலும் ஆய்வுகளைச் செய்தனர். தமது தத்துவ ஆய்வுச் சிந்தனைகளை ஞானநூல்களாகப் படைத்தனர். மொத்தத்தில் சித்தர்கள் பலதுறை வல்லுநர்களாக விளங்கினர்.

சித்த மருந்தியலையும் , சித்த வேதியியலாகிய வாதத்தையும் நவீன வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி ஆராய்வதன் மூலம்  அறிவியல் உலகிற்குப் புதிய வெளிச்சத்தைத் தர முடியும். உலக அறிவியல் வரலாற்றில் சித்தர்களை அறிவியலாளர்களாகக் குறிப்பிடச்செய்ய வேண்டியது நமது கடமை.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

இணையத்தில் ஒரு பல்கலைக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் (முந்தைய பெயர் :தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீடிக்கவும் 17 பெப்ரவரி 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு,ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.

கல்வித்திட்டம்

இக்கழகத்தின் பணித்திட்டம் இணையவழிக் கல்வித்திட்டங்கள், மின் நூலகம், கணித்தமிழ் வளர்ச்சி என பலவற்றைக் கொண்டுள்ளது. கல்வித்திட்டத்தின் கீழ் சான்றிதழ்க் கல்வி மூன்று நிலைகளில் (அடிப்படை,இடைநிலை மற்றும் உயர்நிலை) வழங்கப்படுகிறது. தவிர, தமிழ் மொழி இளங்கலைப் பட்டப்படிப்பும் அளிக்கப்படுகிறது. தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியே தமிழ் முதுகலைப் பட்டமும் வழங்கப்படுகிறது.

மின் நூலகம்

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் மின் நூலகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து, பயில்வோர் மற்றும் உலகு தழுவி வாழும் தமிழர்கள் அனைவரது பயன்பாட்டிற்காகவும் உருவமைக்கப்பட்டுள்ளது. இம்மின் நூலகத்தில் நூல்கள், அகராதிகள், பிற பார்வைக் கூறுகள் என்னும் 3 பிரிவுகள் உள்ளன. சங்க கால நூல்களிலிருந்து சமகால இலக்கியம் வரை பல இலக்கிய படைப்புகளின் மின்னூல்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. வகை பிரித்தல், விளக்கவுரைகளுடன் கூடிய தொன்மை இலக்கியங்கள் மற்றும் உரோமன் எழுத்துருவில் தொல்காப்பியம்,பத்துப்பாட்டு , எட்டுத்தொகை என்பன இந்நூலகத்தின் சிறப்புகளாக விளங்குகிறது. விரிவான பொருள்சார் சுட்டிகளாக்குதல் (subject-indexing) மற்றும் தேடல் வசதியும் பெரும் வசதியாக உள்ளது.
பல்கலைக்கழகத்திற்குச் செல்ல கீழே சொடுக்குக.

இணையக் கலைக்களஞ்சியம்

இணையத்தில் தமிழ் விக்கிப்பீடியா என்ற பெயரில் ஒரு கலைக்களஞ்சியம் உள்ளது.
இது விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும்[1]செப்டம்பர் 2003ல்இது தொடங்கப்பட்டது. 2009நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது[2]. ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2014 மே மாதக் கணிப்பின் படி 62ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.[3]  2015,செப்டம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை அறுபத்தொன்பதாயிரத்தைத் தாண்டியது  . இந்திய மொழி விக்கிகளில் இரண்டாவது இடத்திலும், திராவிட மொழி விக்கிகளில் முதல் இடத்திலும் தமிழ் விக்கி உள்ளது. குறைந்தது 250 எழுத்துகள் கொண்ட கட்டுரைகள் என்று பார்த்தால், இந்திய மொழிகளுள் தமிழ் இரண்டாவதாக உள்ளது.

புதன், 23 ஜனவரி, 2013

தமிழ் மின்நூலகங்கள்











தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம் 
www.tamilvu.org/library/libindex.htm



மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் 
www.projectmadurai.org


தமிழ் நூலகம் 
www.noolagam.org

காந்தளகம் தமிழ்நூல்.காம்
www.tamilnool.com

சென்னை நூலகம்
www.chennailibrary.com

நூலகம்

www.noolaham.org


செந்தமிழ்.ஆர்க் 
www.library.senthamil.org 

தமிழகம் தமிழ் மின்நூலகம்
http://www.thamizhagam.net/tamillibrary/tamillibrary.html